பிடிபட்டவர்களுடன் காவல்துறையினர் pt web
இந்தியா

பீகார் | சிக்கிய ரூ.850 கோடி மதிப்புள்ள 50 கிராம் ‘கலிபோர்னியம்’... தெரியவந்த அதிர்ச்சி பின்னணி!

பீகாரில் ரூபாய் 850 கோடி மதிப்புள்ள 50 கிராம் கலிபோர்னியம் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

பிடிபட்ட கலிஃபோர்னியம்

பீகார் மாநிலம், கோபல்கஞ்ச் அருகே உள்ள குச்சாய்கோட் பகுதியில் பெல்தாரி சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இப்பகுதி உத்தரப்பிரதேச எல்லைக்கு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலிபோர்னியம் கடத்தப்படுவதாக பீகார் மாநிலத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, குச்சாய்கோட் காவல்துறையினர், Special Task Force (STF), Special Operations Group, மாவட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் 8 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 50 கிராம் அளவில் கதிரியக்க தனிமமான கலிபோர்னியம் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர 4 செல்போன்களும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிடிபட்டவர்கள் யார்?

பிடிபட்ட கடத்தல்காரர்களில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர், சோட்லால். இவர் உத்தரப் பிரதேசம், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பர்சூனி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடன் இருந்தவர்களான சந்தன் ராம், சந்தன் குப்தா ஆகியோர் பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள். மூவரும் கூலி வேலைகளைச் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சட்டவிரோதமாக கலிஃபோர்னியம் தனிமத்தை கொண்டு சென்று விற்பனை செய்ய முயற்சித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குஜராத்தில் இருந்து இந்த தனிமம் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினர் தனிமத்தை பறிமுதல் செய்ததும், அதன் நம்பகத் தன்மைக்காக அணுசக்தி துறை மற்றும் தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். துறை சார்ந்த அதிகாரிகள், பிடிபட்ட பொருள் கலிபோர்னியம்-தானா என்பதை ஆய்வு செய்தனர். பீகார் மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை இந்த விவகாரத்தில் விசாரணையில் இறங்கியுள்ளது.

50கிராம் ரூ.850 கோடி

காவல் கண்காணிப்பாளரான ஸ்வர்ன் பிரதாப் சிங் இது தொடர்பாக கூறுகையில், “ஐஐடி மெட்ராஸ் மற்றும் பாண்டிச்சேரி அணுசக்தி நிறுவனத்தில் தனிமம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கலிபோர்னியம் கொண்டுவந்தவர்கள் சென்னை ஐஐடி சோதனைச் சான்று ஒன்றையும் வைத்திருந்தனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி பேராசியரான மோகனிடம் கேட்டபோது சான்றிதழ் போலியானது என தெரிவித்தார்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

கலிபோர்னியம், இந்தியாவில் வாங்குவதற்கும் விற்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விலையுயர்ந்த கதிரியக்கத் தனிமமாகும். ஏனெனில், சந்தை மதிப்பில் 1 கிராம் கலிபோர்னியத்தின் விலை ரூ.17 கோடி. எனவே பிடிபட்ட 50 கிராம் கலிபோர்னியத்தின் மொத்த மதிப்பு ரூ.850 கோடி வரை இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இயற்கையாக கிடைக்கும் வேதிப்பொருள் அல்ல. க்யூரியம் மற்றும் ஹீலியம் அயனிகளுக்கிடையேயான வேதி விணைகளின் மூலம் உருவாக்கப்படுகிறது.

தீவிரமடையும் விசாரணை

இந்த தனிமம் அணு உலைகளில் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மூளை புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. விமான கட்டமைப்புகளை ஆய்வு செய்வதற்கான நியூட்ரான் ரேடியோ கிராஃபியிலும், தங்கம் போன்ற உலோகங்களை கண்டறிவதற்கான போர்ட்டபிள் மெட்டல் டிடெக்டர்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய மதிப்புமிக்க பயன்பாடுகள் இருந்தபோதும், அதன் கதிரியக்கத் தன்மை காரணமாக, இந்த தனிமம் மிகவும் ஆபத்தானதாகவும் அறியப்படுகிறது. பயன்படுத்துவதில் சரியான முறைகளை கையாளாவிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியம் தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் முதன்மைக் குற்றவாளியான சோட்லாலுக்கு இது எப்படிக் கிடைத்தது, பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.