கொல்கத்தா உயர்நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

ஆசிரியர் நியமன ஊழல்.. 24 ஆயிரம் பணியிடங்கள் ரத்து.. கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி!

மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Prakash J

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு, 24,640 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதினர். இதில் 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த 2014 - 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து இன்று (ஏப்ரல் 22) தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்

ஆசிரியர் பணியிடங்கள் தேர்வுமூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் என 24 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

அதாவது, நியமன முறை செல்லாதது என்று அறிவித்ததன் மூலம், அந்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும், பள்ளிச் சேவை ஆணையம் உடனடியாக புதிய தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிடவும், சட்டவிரோதமான நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து அடுத்த ஆறு வார காலத்துக்குள் அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்திருப்பது, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “அனைத்து நியமனங்களையும் ரத்துசெய்த நீதிமன்ற தீர்ப்பு, சட்டவிரோதமானது. வேலை இழந்தவர்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். உங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். சட்டப்படியாக, இதை எதிர்த்து தீர்வு காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய மனுதாரர்.. ரூ.75 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!