சி.பி.ஐ.யில் நடைபெறும் விஷயங்கள் அதன் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தின் தனது கட்டாய விடுப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை 10- நாட்களுக்குள் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூறியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய அமைச்சர் ஜெட்லி “சி.பி.ஐ இயக்குநர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க கூடியது; அமைப்பின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமையில் அமைப்பு இயங்குவது சரியில்லை என்ற அடிப்படையில் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டதே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார்.
திடீரென இரண்டு மூத்த அதிகாரிகளும் எந்த காரணமும் கூறப்படாமல் அனுப்பியது ஏன் என வினவிய போது “ சி.பி.ஐ என்ற புலனாய்வு அமைப்பு சீசரின் மனைவியை போன்றது ; சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டிய இடம், அங்கு யார் மீதாவது சந்தேகம் என்று வந்துவிட்டால், அது அமைப்பின் நம்பகத்தன்மையை குலைப்பதோடு, அமைப்பின் நோக்கத்தையே குலைத்து விடும்” என்றார்
முன்னதாக சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோர் இடையே முற்றி வந்த மோதல் மற்றும் ராகேஸ் அஸ்தானா மீதான லஞ்சப்புகார் ஆகியவை காரணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.