திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 86.56 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க ஆயிரத்து 553 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே 160 கி.மீ தூர பாதையையும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை பாதையாக அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 5 சதவீத கூடுதல் செலவு கணக்கிட்டு இந்த திட்டத்துக்காக 1,272.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.