Byju Raveendran Twitter
இந்தியா

’PF பணம் கூட டெபாசிட் செய்யலையா’ - பைஜூஸ் நிறுவனத்தை சுற்றி நீடிக்கும் சர்ச்சைகளும் குழப்பங்களும்!

Justindurai S

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் கொரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள், அதிகப்படியான வருமானம், அதிகப்படியான மதிப்பீடு என அசத்தியது. ஆனால் இது அனைத்தும் கொரோனாவுக்கு பின்பு மாறியது. லாக்டவுன் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து பைஜூஸ் நிறுவனத்தின் வளர்ச்சி தகர்ந்தது,

Byju Raveendran

தற்போது அனைத்து நிறுவனங்களும் 2022-2023ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் திட்டத்தில் இருக்கின்றன. ஆனால், பைஜுஸ் 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இதனிடையே இந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்யும் நிறுவனமான டெலாய்ட் ராஜினாமா செய்தது. 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான தணிக்கை தாமதமாவதை காரணமாகக் குறிப்பிட்டு ராஜினாமா செய்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பிற இயக்குநர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். தற்போது பைஜூஸ் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இயக்குநர்களாக உள்ளனர். ரவீந்திரன், அவரின் மனைவி மற்றும் சகோதரர் மட்டுமே இயக்குநர்களாக உள்ளனர். மேலும் பைஜூஸ் நிறுவனம் அதன் ஊழியர்களின் பிஎஃப் (PF) தொகையை அவர்களின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை எனற அதிர்ச்சிகரமான செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட1.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 கோடி) அளவுக்குக் கடன் வாங்கி இருக்கிறது. இந்தக் கடனுக்கான தவணை முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் பணம் செலுத்தவில்லை. இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் நடந்துவருகிறது. இதுவரை சில ஆயிரம் நபர்களை வேலையில் இருந்து பைஜூஸ் நீக்கி இருக்கிறது.

Byju Raveendran

இந்நிலையில் பைஜூஸ் நிறுவனத்தைச் சுற்றி சர்ச்சைகளும் குழப்பங்களும் நீடித்துவரும் நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரன் நேற்று ஊழியர்களை சந்தித்து உரையாடினார். அப்போது, பில்லியன் கணக்கான கடன் சுமை தொடர்பாக ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் நீதிமன்றத் தலையீடு இல்லாமலேயே சாதகமான முடிவைப் பெறுவதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் ஊழியர்களிடம் கூறினார். மேலும், இச்சந்திப்பின் போது ஊழியர்கள் தங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் அனுப்புமாறு தெரிவித்ததாகவும் ஊழியர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து பைஜூஸ் நிறுவன ஊழியர் ஒருவர் பேசும்போது பணிநீக்கங்கள், போனஸ் அல்லது பி.ஃஎப் குறித்து பைஜு ரவீந்திரன் எதுவும் பேசவில்லை என்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு BDO-வை நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களாக நியமிப்பது பற்றி ரவீந்திரன் கூறுகையில் இது பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவு என்றும், திறமையான மற்றும் சரியான நேரத்தில் தணிக்கை செய்வதில் கவனம் செலுத்த எடுக்கப்பட்டதாகவும் கூறியதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

மூன்று நிர்வாகக் குழு உறுப்பினர்களின் விலகலுக்கும், டெலாய்ட் நிறுவனத்தின் ராஜினாமாவுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்திய ரவீந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரஸ்பர புரிதலுடன் சுமுகமான முறையில் வெளியேறியதாக ரவீந்திரன் கூறியதாக பைஜூஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.