இடைத்தேர்தல் எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா, உ.பி., பஞ்சாப் | 14 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி மாற்றம்!

கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், 48 சட்டமன்ற தொகுதிகள், கேரளாவில் ஒரு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அம்மாநிலங்களில் நடைபெற இருக்கும் பண்டிகைகளைக் கருத்தில்கொண்டு, தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த மாநிலங்களில் நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சமூக, கலாசார பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என அரசியல் கட்சிகள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக், சப்பெரிவால், கிட்டர்பாஹா, பர்னாலா தொகுதிகளிலும், உத்தரப் பிரதேச மீராப்பூர், குண்டர்கி, காசியாபாத், காய்ர், கர்ஹால், சிஷாமௌ, புல்பூர், கட்டெஹரி, மாஜவான் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை முன்னர் அறிவித்தப்படியே, நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | விலகிய மராத்தா சமூகத் தலைவர்.. பின்னணி காரணம் என்ன?