இந்தியா

48 மணி நேரத்திற்குள் பாஜகவிலிருந்து விலகிய மூன்றாவது அமைச்சர்!- உ.பி களநிலவரம் சொல்வதென்ன?

48 மணி நேரத்திற்குள் பாஜகவிலிருந்து விலகிய மூன்றாவது அமைச்சர்!- உ.பி களநிலவரம் சொல்வதென்ன?

PT

கடந்த 48 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவிலிருந்து 3 அமைச்சர்கள் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு விலகுவது அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது உத்தரபிரதேச தேர்தல் களத்தில் விரிவாக காணலாம்.

403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலை போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலான கட்சிகள் தனித்தனியாக தங்கள் சொந்த பலத்தில் தேர்தலை சந்திக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் மாநிலத்தில் நிலவிய சூழல் உள்ளிட்டவை பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சாதகமாக இருந்த சூழலில் தற்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கி இருக்கிறது என்று தான் சொல்லவேண்டியுள்ளது. காரணம் சீட்டுக் கட்டுகள் சரிவது போல அடுத்தடுத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது தான்.

கடந்த 48 மணி நேரத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா இதர பிற்படுத்தப்பட்டோருக்கு யோகி தலைமையிலான அரசு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை எனவே மக்களின் நலன் கருதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

சொல்லி வைத்தார் போல் இதே காரணத்தை சுட்டிக்காட்டி உத்திரபிரதேசத்தின் வனத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான், ஆயுஷ் அமைச்சர் தரம் சிங் சைனி ஆகியோரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிலிருந்து விலகி உள்ளனர்.

பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் லால் வர்மா, பகவதி பிரசாத், பிரஜேஷ் பிரஜாபதி, வினை சக்தியா, முக்கேஷ் வர்மா, அவ்தார் சிங் பதனா, 7 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஓபிசி பிரிவினருக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு எந்த ஒரு நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை எனக்கூறி ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களை தவிர கடந்த மாதமே திக்விஜய் நாராயண் சோபே, ராதா கிஸன் வர்மா, மாதுரி வர்மா ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருந்தனர்.

இப்படி பாஜகவில் இருந்து வெளியேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து இருக்கின்றனர். எனினும் தொடர்ந்து தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து விலகி வருவது தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கக்கூடிய நேரத்தில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காரணம் உத்தரபிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாக்குகள் என்பது வெற்றிக்கான துருப்புச் சீட்டு.

ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச மாநில வாக்காளர்களில் 42 முதல் 45 சதவீதம் பேர் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இதில் ஒன்பது சதவிகிதம் பேர் யாதவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் எனவே மீதமுள்ள 32 முதல் 35 சதவீதமான வாக்குகள் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் மிக மிகப் பிரதானமானது.

இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது ஓபிசி பிரிவைச் சேர்ந்த 28 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.

சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளுக்கான போட்டியில் ஏற்கனவே காங்கிரஸ் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மற்றும் உள்ளூர் கட்சிகள் இருப்பதால் இந்த வாக்குகளை மொத்தமாக பெறுவது என்பது பாஜகவிற்கு சற்று கடினமான வேலை.

எனவே உயர் சாதிப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினரின் வாக்குகளை தான் தனது வெற்றிக்கான முக்கிய சூத்திரமாக பாஜக நம்பி வந்தது.

கடந்த தேர்தலின் போது கூட யாதவர்கள் அல்லாத ஓபிசி பிரிவினரின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்காக சுவாமி பிரசாத் மெளரியா போன்ற முக்கிய ஓபிசி தலைவர்கள் பாஜகவில் இணைக்கப்பட்டது அக்கட்சிக்கு பெரும் பலனையும் கொடுத்தது. 

ஆனால் இப்போது அதே ஓபிசி பிரிவை சேர்ந்த முக்கிய தலைவர்களின் விலகல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அதுவும் பாஜகவில் இருந்து பிரிந்த இவர்கள் மிக வலுவாக உள்ள சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து இருப்பதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் கன்னாபின்னாவென சிதறும் வாய்ப்பு உள்ளது.

எனினும் வெறும் எண்களினால் போடப்படும் இந்த கணக்குகளுக்கும் யதார்த்தத்திற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும் என்றும் அது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் பாஜகவின் முக்கிய தலைவர்கள்.

-நிரஞ்சன்