நிதிநிலை கருத்தரங்கில் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் பேசிய வெளிப்படையான கருத்துகள் தொடர்பான கட்டுரையை alzazeera செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் என்ற அரசு சாரா சிந்தனை குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் நிதிநிலை குறித்த கருத்தரங்கில் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் வரியில் 50 விழுக்காடு மாநில அரசுக்கு வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு அவரின் சிந்தனை செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மத்திய அரசின் வரியில் 42 விழுக்காடு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் பிரதமர் அதனை 33 விழுக்காடாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போதைய நிதி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனை அவர் மறுத்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் நான் இணைச்செயலராக இருந்த அந்த காலக்கட்டத்தில் மூவருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இது குறித்து பேசப்பட்டது.
அரசாங்கத்தின் கணக்குகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றால் ஹிண்டன்பர்க் போன்ற அறிக்கைகள் மூலம் அவை வெளிப்படுத்தப்படலாம். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உள்கட்டமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடு நடந்தது” என்று தெரிவித்துள்ளார். அரசு அதிகாரி ஒருவரின் வெளிப்படையான இந்த கருத்துகாளால் பல விவாதங்கள் பொதுத்தளத்திற்கு வந்துள்ளன.
மேலும் இது குறித்து பொருளாதார ஆலோசகர் புகழேந்தி தெரிவிக்கையில், “மத்திய அரசு நாட்டின் கட்டமைப்பில் கவனம் செலுத்துவதால் அதிகப்படியான நிதி அவர்களுக்கு தேவைப்படலாம். நாட்டை வளப்படுத்த அதிகப்படியான நிதி கையாளப்படும் சமயத்தில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதில் கவனம் செலுத்தினால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியத்தின் இந்த வெளிப்படையான பேச்சு யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் alzazeera வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.