கனரா வங்கி தலைமையிலான ஆறு வங்கிகளின் கூட்டமைப்பில் சுமார் ரூ.350 கோடி மோசடி செய்த பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் இயக்குநரான மஞ்ஜித் சிங் மக்னி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில், அமிர்தசரஸைச் சார்ந்த பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் மஞ்சித் சிங் மக்னி, அவரது மகன் குல்விந்தர் சிங் மக்னி, அவரது மருமகள் ஜாஸ்மீத் கவுர், சில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆறு வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், அந்த நிறுவனம் நிலுவைத் தொகையைச் செலுத்துவதை நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் கனரா வங்கியில் ரூ.175 கோடியும், ஆந்திர வங்கியில் ரூ.53 கோடியும், யுபிஐ வங்கியில் ரூ.44 கோடியும், ஓபிசி வங்கியில் ரூ.25 கோடியும், ஐடிபிஐ வங்கியில் ரூ.14 கோடியும், யூகோ வங்கியில் ரூ.41 கோடியும் கடன் பெற்றுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாக கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டில் அந்நிறுவனம் வங்கி கூட்டமைப்பு ஏற்பாட்டைத் தேர்வு செய்தனர். கனரா வங்கி தலைமையில் இந்தக் கூட்டமைப்பில், ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி, ஓபிசி, யுபிஐ மற்றும் யூகோ வங்கிகள் இருந்தன.
அந்நிறுவனம் அசல் மட்டும், வங்கி தவணைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், கடந்த 25.04.18 இல் ‘செயல்படாத சொத்துக்கள்' என வகைப்படுத்தப்பட்டது. ஆந்திர வங்கி 31.03.2018 அன்றும்; ஓ.பி.சி வங்கி 27.6.2018 அன்றும்; ஐ.டி.பி.ஐ 31.3.2018 அன்றும்; யு.பி.ஐ 30.4.2018 அன்றும் யூகோ வங்கி 31.3.2018 அன்றும் வரையறுத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்ஜித் சிங் மக்னி 2018 ஆம் ஆண்டே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும். இப்போது அவர் கனடாவில் வசிக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.