பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் வியாபாரம் இப்போதும் அமோகத்தான் நடந்து வருகிறதாம். 1 கோடி ரூபாய்க்கு 9 லட்சம் ரூபாய் வரை கமிஷன் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் மாற்றுவதற்கான கெடு கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டும் இந்தாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழியை பயன்படுத்திக்கொண்டு நம் நாட்டைச் சேர்ந்த பணக்காரர்களும், பெரும் புள்ளிகளும் வெளிநாட்டு இந்தியர்களின் மூலமாக தங்களின் பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் தருபவர்களுக்கும் மாற்றி தருபவர்களுக்கும் இடையே செயல்படும் நபர்கள் இதன் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 1கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால், 9 லட்சம் வரை கமிஷன் தரப்படுகிறது என்கிறார்கள். இதற்கு இடைத்தரகர்களாக செயல்படும் நபர்களுக்கு ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை கமிஷன் கிடைப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் ஏராளமானோர் பழைய நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டதன் பின்னணி இதுதான் எனவும் கூறப்படுகிறது.