bengaluru bus stand twitter
இந்தியா

கிணத்த காணோம் பாணியில் திருடுபோன ரூ10 லட்சம் மதிப்புள்ள நிழற்குடை.. விழிபிதுங்கும் பெங்களூரு போலீஸ்!

பெங்களூருவில் எஃகினால் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிழற்குடை காணாமல் போயிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல் துறையை அழைத்து வந்து புகார் அளிப்பார். அதேபோன்ற ஒரு சம்பவம் நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.

bus stop model

பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்குப் பின்புறத்திலும், கர்நாடக பேரவைக் கட்டடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைதான் தற்போது காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, செப்டம்பர் 30ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’காவி’க்கு மாறிய இந்திய வீரர்கள்! - கன்பியூஸ் ஆன ரசிகர்கள்!

புகாரில், ’பெங்களூரு மாநகராட்சி சார்பில், பெங்களூரு மாநகருக்குள் புதிதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட கன்னிகம் சாலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது. அது துரு பிடிக்காத எஃகினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையை கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்று பார்வையிட்டபோது, அங்கு அது இல்லை. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்துதான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான, எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு சாலையிலேயே, பேருந்து நிழற்குடையையே யாரோ களவாடிச் சென்றிருக்கிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bengaluru police

சிஆர்பிசி பிரிவு 157இன்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், பெங்களூருவில் நிழற்குடை காணாமல் போன விஷயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: "மனதளவில் மனைவி என்னை துன்புறுத்துகிறார்”-விவாகரத்து பெற்றார் தவான்! மகனைக் காட்ட நீதிமன்றம் உத்தரவு