இந்தியா

வங்கியில் ஓட்டை போட்டு பல கோடி கொள்ளை: 30 லாக்கர் காலி!

வங்கியில் ஓட்டை போட்டு பல கோடி கொள்ளை: 30 லாக்கர் காலி!

webteam

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் உள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை. இந்த வங்கி கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. நேற்று காலையில் வங்கிக்கு வந்த அதிகாரிகள், லாக்கர் இருக்கும் அறையை திறந்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே 30 லாக்கர்கள் திறந்து இருந்தன. அதில் இருந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. இதையடுத்து போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது சுவரில் 2 அடி துளையிட்டு அந்த ஓட்டையின் மூலமாக கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்டவற்றின் மதிப்பு சரியாகத் தெரியவில்லை என்றாலும் பல கோடி ரூபாய் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘வங்கி ஊழியர் அனில் பார்கவ், தலைமை காசாளர் அஜய் குமார் ஆகியோர் லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்துள்ளனர். அந்த அறையில் 435 லாக்கர்கள் இருக்கின்றன. அதில் 30 உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் இருக்கும் அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவற்றை கொள்ளையர்கள் செயலிழக்க வைத்துள்ளனர்’ என்றனர். இந்தக் கொள்ளைக்கு வங்கி ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.