பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் அதிகமாக உண்டால் உடல்நலத்துக்கு நல்லவையல்ல என்று தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தாலும் என்றேனும் ஒரு நாளாவது அதனை ருசித்துவிட வேண்டும் அல்லது சாப்பிட முடியாத என்று ஏங்குவோரும் இருக்கவேச் செய்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல பர்கர் உணவகமான பர்கர் கிங்கில் சிறுமி ஒருவர் பர்கர் வாங்கி சாப்பிட வந்திருக்கிறார். ஆனால் அந்த சிறுமியிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் செய்வதறியாது இருந்தபோது அந்த உணவக ஊழியர் சிறுமிக்கு பர்கர் வாங்க உதவியது நிகழ்வு தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததோடு உணவக நிர்வாகம் உட்பட பலரது பாராட்டையும் பெற வைத்திருக்கிறது.
கடந்த அக்டோபர் 16ம் தேதி உத்தர பிரதேசத்தை அடுத்த நொய்டாவில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதன்படி, 90 ரூபாய் மதிப்புள்ள பர்கர் வாங்க 10 ரூபாயுடன் வந்த சிறுமிக்கு உதவும் வகையில் பர்கர் கிங் ஊழியர் தன்னிடமிருந்து 80 ரூபாய் சேர்த்து கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்வை உணவகத்தில் இருந்த நிருபர் ஆதித்யா குமார் என்பவர் ஃபோட்டோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரவே அது பெருமளவில் வைரலாகியிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உலக உணவு தினத்தன்று இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
இதனையடுத்து மனித நேயத்தின் அடிப்படையில் சிறுமிக்கு பர்கர் வாங்க உதவிய பர்கர் கிங் ஊழியர் தீரஜை பாராட்டி அதன் நிர்வாகம் அவரை கவுரவித்திருக்கிறது. இது தொடர்பான பர்கர் கிங் இந்தியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருக்கிறது.
அதில், “நொய்டா பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையத்தில் உள்ள பர்கர் கிங் ஊழியர் தீரஜின் கனிவான செயலால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டோம். எங்கள் கிளைக்கு வந்த குட்டி சிறப்பு விருந்தினருக்கு உதவிய தீரஜின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. ஆகையால் தீரஜிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.