இந்திய அளவில் கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை உயர்வு பேசுபொருளாக இருந்தது. பருவமழை பொய்த்தது, அதிகமான வெயில் போன்ற காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், அதனாலேயே தக்காளி விலை 150 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படதென்றும் கூறப்பட்டது.
நாட்டின் சில இடங்களில் கிலோ 200 ரூபாய்க்குக் கூட விற்கப்பட்டதால், சாமானிய மக்களால் தக்காளி வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வீட்டுச்சாப்பாடு மட்டுமன்றி உணவகங்களிலும் தக்காளி விலை உயர்வு எதிரொலித்தது. உணவகங்களும் மிகவும் குறைவாகவே தக்காளி பயன்படுத்தின. மிகவும் பிரபலமான மெக்டொனால்டு உணவகங்களில் தக்காளி பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
மெக்டொனால்டை தொடர்ந்து பிரபல துரித உணவு உணவகமான பர்கர் கிங் நிறுவனமும் இந்தியாவில் உள்ள தங்களது உணவகங்களில் தக்காளி பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக இப்போது அறிவித்திருக்கிறது.
‘தக்காளிக்குக் கூட விடுமுறை தேவை... எங்களால் உணவில் தக்காளியை சேர்க்க முடியவில்லை’ என்று இரண்டு பர்கர் கிங் ஹோட்டல்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. Wraps மற்றும் பர்கரிலிருந்து தக்காளியை நீக்கியுள்ள இந்நிறுவனம், இலவசமாக சீஸ் ஸ்லைஸ் வழங்கிவந்த நடைமுறையையும் சமீபத்தில் நிறுத்தியிருந்தது. இந்தியாவில் சுமார் 400 கிளைகளை வைத்திருக்கும் பர்கர் கிங் உணவகம், தக்காளி பற்றாக்குறை, விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பர்கர் கிங் வலைதளத்தின் சப்போர்ட் பக்கத்தில், வாடிக்கையாளரொருவர் ‘ஏன் பர்கரில் தக்காளி இல்லை’ என்று கேட்டிருந்தார். அதற்கு அந்நிறுவனம் தரப்பில் ‘தக்காளி விரைவில் சேர்க்கப்படும். அதுவரை உங்கள் பொறுமை மற்றும் புரிதலை எதிர்பார்க்கிறோம். எங்களின் இந்திய கிளைகள், மிக உயர்ந்த தரம் கொண்ட உணவுகளையே கொடுக்கும்’ என பதில் கூறப்பட்டுள்ளது.
தக்காளி விலை மட்டுமல்லாது, வெங்காயம், பட்டாணி, பூண்டு, இஞ்சி போன்றவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் சில்லறை பணவீக்கம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் காய்கறிகளின் விலை 37 சதவீதம் உயர்ந்துள்ளதாக கடந்த ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.