இந்தியா

“அமானுஷ்ய, பேய் நிகழ்ச்சிகளை வழக்கமாக பார்த்தார்” - 11 பேர் மரணத்தில் சில திருப்பம்

webteam

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டிற்குள்ளேயே கோயிலை கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்து வருவதால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் சுண்டவத் தான். தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக எண்ணி ஒரு மாய உலகில் வாழ்ந்துள்ளார். மோட்சத்தை அடைய தற்கொலை தான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரிடம் லலித் தெரிவித்துள்ளார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், மரணங்கள் குறித்து, ஆன்மாவின் மர்மங்கள் குறித்தும் லலித் பாட்டியா ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். 

இந்நிலையில், லலித்தின் மொபைல் போன் மற்றும் டைரிகளை ஆராய்ச்சி செய்த போலீசார் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘அவரது மொபைல் போன் தகவலின் படி, அமானுஷ, பேய் தொடர்பான நிகழ்ச்சிகளை யூடியூப் மற்றும் மற்ற இணையதளங்களில் பார்த்துள்ளார்’ என்றார். அதேபோல்,, ‘மர்மமான முறையில் தூக்கிலிட்டு இறந்து போனதாக கூறப்படும் 11 பேரும் 10 நாட்களுக்கு முன்பாக உயிரிழப்பதற்கு தயாராகி இருக்க வேண்டும்’ என்றார்.

துணை கமிஷனர் திர்கி கூறுகையில், “இந்த மரணம் நிகழ்ந்ததில் லிலித் மற்றும் அவரது மனைவியின் எப்படியான பங்களிப்பு இருக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

கிரைம் பிரிவு போலீசார் சிசிடிவியில் உள்ள 2 மாதங்களுக்கான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கணவன், மனைவியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. ஜூன் 23ம் தேதி முதல் 30 வரை சடங்குகளுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

லலித் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறுநாள் நினைவுகூர்ந்து எழுதி வைக்கும் பழக்கம் உடையவர். இதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. இதனை ஆய்வு செய்ய உளவியல் மருத்துவரையும் உதவிக்கு அழைத்துள்ளோம்” என்றார்.