மகாராஷ்டிரா ANI
இந்தியா

மகாராஷ்டிரா: 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாலிச் சங்கிலியை விழுங்கிய எருமை! உரிமையாளர் எடுத்த முடிவு

மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தாலிச் சங்கிலியை எருமை மாடு ஒன்று விழுங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராம்ஹரி. இவருடைய மனைவி, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி குளிக்கச் சென்றுள்ளார். அவர் குளிக்கச் செல்வதற்கு முன்பு, தன்னுடைய தாலி சங்கிலியை கழற்றி, சோயாபீன் மற்றும் கடலைப்பருப்பு நிரப்பப்பட்ட தட்டு ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், குளித்துவிட்டு பிற வேலைகளைக் கவனித்து வந்துள்ளார். அதற்குள் சோயாபீன் மற்றும் கடலைப்பருப்பு நிரப்பப்பட்ட, அந்தத் தட்டை எருமைக்கு உணவாக வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா

அதாவது, தாலியை அதில் மறைத்து வைத்த ஞாபகமே இல்லாமல் அந்த தட்டை எருமை முன் வைத்துள்ளார். பின், வீட்டுக்குள் சென்று இன்னும் சில வேலைகளைக் கவனித்துவிட்டு தன் தாலியைத் தேடியுள்ளார். ஆனால், வீடு முழுவதும் தேடியும் தாலி கிடைக்காததால், இறுதியில் ஞாபகம் வந்த நிலையில், எருமைக்கு வைத்த தட்டைப் போய்ப் பார்த்துள்ளார். அந்த எருமை அனைத்து உணவுகளையும் தின்றுவிட்டது. அத்துடன் அந்த தாலியும் விழுங்கிவிட்டது. அந்த தாலி செயினின் மதிப்பு சுமார் 20 கிராமுக்கு மேற்பட்ட தங்கத்தைச் சேர்ந்தது எனவும், ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புமிக்கது எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: டெல்லியில் பத்திரிகையாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு! லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்! நடந்தது என்ன?

இதுகுறித்து தன் கணவருக்குத் தெரிவித்தார். அவர், காலநடை மருத்துவருடன் களத்துக்கு வந்தார். சோதனையில், மருத்துவர் எருமையின் வயிற்றில் தாலி இருப்பதை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேர அறுவைச்சிகிச்சைக்கு பிறகு எருமையின் வயிற்றில் இருந்து தாலி சங்கிலி மீட்கப்பட்டது. அதற்காக எருமைக்கு 60-65 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த கால்நடை மருத்துவர், ’விலங்குகளுக்கு தீவனம் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதில் வேறு எந்தப் பொருட்களும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: அண்ணாமலை இல்லாத கூட்டம்: நிதியமைச்சரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?