நிர்மலா சீதாராமன் PTI
இந்தியா

பட்ஜெட் 2024-25 | 9 துறைகளுக்கு முன்னுரிமை... நிதியமைச்சர் உரையின் முக்கியம்சங்கள்!

“மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திரமோடி தலமையிலான அரசின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எங்கள் கொள்கைக்கு அவர்கள் அளித்த ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” - நிதியமைச்சர்

Jayashree A

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.

நிர்மலா சீதாராமன்

அப்போது பேசிய நிதியமைச்சர், “மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திரமோடி தலைமையிலான அரசின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எங்கள் கொள்கைக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கும், அதன்மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த 2024-25 வது ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் உள்ளது. கல்வி த்திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் 9 துறைகள் முன்னுரிமை அளிக்கப்பட அடையாளம் காணப்பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்.

முன்னுரிமை அளிக்கப்பட உள்ள 9 துறைகள்:

விவசாயம், வேலைவாய்ப்பு, சமூகநீதி, உற்பத்தி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.