இந்தியா

ஜாலியன் வாலாபாக் நினைவு நாள்: பிரிட்டன் தூதர் மரியாதை

ஜாலியன் வாலாபாக் நினைவு நாள்: பிரிட்டன் தூதர் மரியாதை

webteam

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூறாண்டு நினைவு தினத்தையொட்டி அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1919 ஆம் ஆண்டில் ரவுலட் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஆங்கிலேய அரசு பிறப்பித்திருந்தது. இதன்படி யாரை வேண்டுமானாலும், காரணம் இன்றி கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதை போல, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது ஜெனரல் டயர் என்ற வெள்ளை அதிகாரி, பீரங்கி, துப்பாக்கி படைகளுடன் அங்கு வந்து அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டார். இந்த கொடூர வன்முறையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையின் நூறாண்டு நினைவு தினம் இன்று. 

இதையொட்டி அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பிரிட்டன் தூதர் டோமினிக், அங்குள்ள நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்தார்.
 
இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஜாலியன் வாலிபாக் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார். அப்போது பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், அமைச்சர் சித்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.