பிரிஜ் பூஷண் சரண் சிங் எக்ஸ் தளம்
இந்தியா

கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்

Prakash J

ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதன்படி, அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் அதேநேரத்தில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் சார்பில் 31 வேட்பாளர்கள் பட்டியலில், வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில், “எனக்கு எதிரான போராட்டம் மற்றும் சதியில் காங்கிரஸின் தலையீடு இருந்தது” என பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், “ஜனவரி 18, 2023 அன்று போராட்டம் தொடங்கியபோது, ​​இது மல்யுத்த வீரர்களின் போராட்டம் அல்ல என்றும், அதன் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்றும் முதல்நாள் அன்றே நான் கூறியிருந்தேன். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, அவரது மகன் மற்றும் எம்.பி. தீபேந்தர் ஹூடா மற்றும் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பின்னால் இருந்தது இப்போது உண்மையாகியுள்ளது. அதற்கான முழு திட்டமிடலுடன்தான் போராட்டம் போன்று நடத்தப்பட்டது” என்றார்.

தொடர்ந்து அவர், “உண்மையில், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம் அல்ல. இந்த நாடகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பது, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகியுள்ளது. மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணியில் பூபேந்தர் ஹூடாதான் உள்ளார். தீபேந்தர் ஹூடா, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் இதன் பின்னணியில் இருந்தனர். புரியும்படி சொன்னால், இது காங்கிரஸின் இயக்கம். இந்த முழு இயக்கத்திலும், எங்களுக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தில், பூபேந்தர் ஹூடாதான் தலைமை தாங்கினார்.

அவர்களால் ஹரியானாவின் மகள்களுக்குதான் சங்கடம். பூபேந்தர் ஹூடா, தீபேந்தர் ஹூடா, பஜ்ரங், வினேஷ் ஆகியோர் மற்ற வீராங்கனைகளுக்காக போராட்டத்தில் அமரவில்லை என்பதை ஹரியானா மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். தற்போது, அவர்கள் காரணமாக, ஹரியானா மகள்களான வீராங்கனைகள்தான் சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல; பூபேந்தர் ஹூடா, தீபேந்திர ஹூடா உள்ளிட்ட இந்த போராட்டக்காரர்கள்தான் பொறுப்பு. வீராங்கனைகளின் கௌரவத்திற்காக அவர்கள் போராடவில்லை; அரசியலுக்காகதான் போராடினர். ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஹரியானாவில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் அவர்கள் போட்டியிடலாம்; ஆனால் ஒரு சிறிய பாஜக வேட்பாளரே அவர்களை தோற்கடித்து விடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக சாக்‌ஷி மாலிக், வினேத் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகக் குற்றஞ்சாட்டி இருந்ததுடன், டெல்லியில் போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.