உத்தரகண்ட் முகநூல்
இந்தியா

உத்தரகண்ட்|கட்டுமான பணியின்போதே 2 ஆவது முறையாக இடிந்து விழுந்த பாலம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாலம் ஒன்று, கட்டுமானப்பணியின் போது இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாலம் ஒன்று, கட்டுமானப்பணியின் போது இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில், நிலச்சரிவினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டதுதான், உத்தரகண்டின் முதல் வளைந்த பாலம். இது ரூ.76 கோடி செலவில், 40 மீட்டர் உயரத்தில் 110 மீட்டர் நீளத்தில் கட்டுப்பட்டு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இப்பாலத்தின் டெண்டர் ஆர்சிசி இன்ஃப்ராவென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கட்டுமானப்பணியில் இருந்த இப்பாலம், நேற்று (18.7.2024) அதிகாலை 4 மணி அளவில் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக விபத்து ஏற்பட்ட நேரத்தில் யாரும் அங்கே இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்த பாலம் இடிந்துவிழுவது புதிதல்ல, இதற்கு முன்னதாகவே, கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதத்திலும் இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மீட்புப்பணிகள் நடைப்பெற்றது.

இதில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கன்ஹையா குமார், பங்கஜ் குமார் என்ற 2 தொழிலாளர்கள் பாலத்தின் அடியில் இரும்பு கம்பிகளுக்கு இடையில் சிக்கி கொண்டனர். பின்னர், இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், இரண்டு தூண்களும் முடிவடையும் தருவாயில் இருந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக இந்த பாலம் இடிந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.