தாலிக்கட்டும் நேரத்தில் மணப்பெண் திடீரென மாரடைப்பால் இறந்தும், கல்யாணத்தை நிறுத்தாமல் மணப்பெண்ணின் தங்கையை மணமகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியிருக்கிறது.
வாழ்வின் முக்கியமான அங்கமாக இருக்கக் கூடிய நிகழ்வுகளில் ஒன்று, திருமண நிகழ்வு. அடுத்தகட்ட வாழ்க்கையான திருமணம் என்ற உறவில் அடியெடுத்து வைக்கும் ஒரு நாள்தான், தன்னுடைய வாழ்வின் கடைசி நாளாக இருக்கும் என எந்தப் பெண்ணும் நினைக்க மாட்டார். குஜராத்தைச் சேர்ந்த ஹீதல் என்ற பெண்ணும், அப்படித்தான்... அவரும் அறிந்திருக்கவில்லை.
ஜினாபாய் ரத்தோர் என்பவரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாய் என்பவரின் மகன் விஷால் என்பவருக்கும், நாரி என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குஜராத்தின் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மஹாதேவ் கோயிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த திருமண நிகழ்வின் போது, எதிர்பாராதவிதமாக மணப்பெண் ஹீதல் மாரடைப்பால் திடீரென மரணித்திருக்கிறார்.
திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் பலரும், கொண்டாட்ட மனநிலையில் திளைத்திருந்த வேளையில் இந்தத் துயரச்சம்பவம் நடந்துள்ளது. திருமணத்துக்கான சடங்குகளெல்லாம் கோலகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணப்பெண் ஹீதல் திடீரென மயங்கி விழுந்தார் என சொல்லப்படுகிறது. ஹீதல் மயங்கியதையடுத்து அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அவரை உடனடியாக குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குதான் மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் அதிர்ந்துப்போன பெண் வீட்டார், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். மணப்பெண் ஹீதலின் இழப்பால் குடும்பத்தினர் வேதனையில் இருந்த வேளையில், திருமணத்துக்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என விருந்தினர்கள் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
மேலும், ஹீதல் இறந்துவிட்டதால் அவரது தங்கையையே மணமகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான யோசனையையும் வழங்கியிருக்கிறார்கள். இதனை ஒப்புக்கொண்ட குடும்பத்தினர், ஹீதலின் உடலை ஐஸ்பெட்டியில் வைத்துவிட்டு, அவரது தங்கையை மணப்பெண்ணாக்கி திருமணமும் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகே ஹீதலுக்கான இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, பாவ்நகர் பகுதியில் மல்தாரி சமாஜை சேர்ந்தவர்கள் ஹீதல் மறைந்ததும் அவரது தங்கையையே மணமுடித்து கொடுத்ததும் வேதனையளிக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் மணப்பெண்ணான ஹீதலின் தங்கையை மறுவீட்டுக்கு இப்போதைக்கு அனுப்பக் கூடாது என்றும் சமாஜ் உறுப்பினர்கள் பெண் வீட்டாரிடம் கூறியிருக்கிறார்களாம். இதனால் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்காவின் திடீர் மரணத்துக்கு வேதனைப்படுவதா, தன்னுடைய திடீர் திருமணத்தை நினைத்து அச்சப்படுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் அந்த புது மணப்பெண் மூழ்கியிருக்கக்கூடும் என நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்துவருகின்றனர்.