இந்தியா

தொட்டாலே விழும் பொறியியல் கல்லூரி கட்டட அடித்தளம்! - சமாஜ்வாடி எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோ

தொட்டாலே விழும் பொறியியல் கல்லூரி கட்டட அடித்தளம்! - சமாஜ்வாடி எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோ

நிவேதா ஜெகராஜா

உத்தரபிரதேச லக்னோவில் பொறியியல் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்த கட்டடமொன்று, மிக மோசமான தரத்துடன் கட்டப்பட்டிருப்பதை அம்மாநில சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.யொருவர் நேரில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அந்த எம்.எல்.ஏ.வும், அம்மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு சென்ற எம்.எல்.ஏ. ஆர்.கே.வெர்மா, அங்கிருந்த செங்கல் தூண்-ஐ தனது கைகளால் லேசாக தள்ளுகிறார். அப்போது அது அப்படியே கீழே விழுகின்றது. விழுந்த அந்த தூண், ஒரு நான்கு மாடி கட்டிடத்துக்காக கட்டப்பட்டது என்று வீடியோவில் எம்.எல்.ஏ தெரிவிக்கிறார். நேற்றைய தினம் கள ஆய்வுக்காக எம்.எல்.ஏ. அந்த இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், அதில் “பாஜக-வின் ஊழல் ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்கள் யாவும் தனித்துவமிக்கமானதுதான். அப்படித்தான் இந்தக் கட்டிடமும். இக்கட்டிடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் கூட, சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது” என்றுள்ளார். இக்கட்டடம் ஒரு பொறியியல் கல்லூரிக்காக கட்டப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கள ஆய்வின்போது அந்தக் கட்டிட கட்டுமானத்தின் பிற இடங்கள் எவ்வளவு மோசமாக கட்டப்பட்டுள்ளது என்பதையும் அங்கிருந்தவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இதை எம்.எல்.ஏ. ஆர்.கே.வெர்மா தனது ட்விட்டல் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், “இதுபோன்ற தரக்குறைவான கட்டுமானப் பணிகள் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கட்டிக்காக்காது. இது அவர்களின் மரணத்திற்கு ஏற்பாடு செய்வது போன்றது. ராணிகஞ்ச் சட்டசபையில் கட்டப்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் ஊழல் நிறைந்த அரசு இயந்திரத்தின் ஒரு காட்சி” என்றுள்ளார்.