இந்தியா

'சூத்திரர்களை சமூகப் பெயர் சொல்லி அழைப்பதில் என்ன குற்றம்?'- பிரக்யா எம்.பி சர்ச்சை பேச்சு

'சூத்திரர்களை சமூகப் பெயர் சொல்லி அழைப்பதில் என்ன குற்றம்?'- பிரக்யா எம்.பி சர்ச்சை பேச்சு

webteam

"சூத்திரர்களை சூத்திரர்கள் என அழைத்தால் அவர்கள் கோவப்படுவது ஏன்?" என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் சர்ச்சைப் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், பாஜக எம்.பியுமான பிரக்யா தாகூர் சமூக ரீதியாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சையாகப் பேசி அவ்வப்போது சிக்கலில் மாட்டுக்கொள்ளும் பாஜக எம்பி பிரக்யா தாகூர், கோட்சே ஒரு தேசபக்தர் என்று மக்களவையில் பேசியது முன்பு சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சில் சிக்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில், ஒரு சமூக மாநாடில் கலந்துகொண்டு பேசிய பிரக்யா தாகூர், "பிராமணர்களை, பிராமணர்கள் என்று அழைத்தாலோ, ஷத்திரியர்களை ஷத்திரியர்கள் என அழைத்தாலோ, வைசியர்களை வைசியர்கள் என அழைத்தாலோ அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆனால் சூத்திரர்களை சூத்திரர்கள் என அழைத்தால் மட்டும் அவர்கள் கோவப்படுவது, குற்றமாகக் கருதுவது ஏனோ?" என கேள்வி எழுப்பியுள்ளார். "இது சமூக அமைப்பு பற்றி சூத்திரர்களின் அறியாமையைக் காட்டுகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டம் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மட்டுமே இருக்க வேண்டும். தேசத்திற்காகவே வாழ்பவர்களுக்கு அது பொருந்தாது. எனவே ஷத்திரிய சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பாக அவர்கள் இருக்க வேண்டும். டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. தேசத் துரோகிகள்" என்று அவர் பேசியுள்ளார். 

இதையடுத்து, சமூக ரீதியாக பிரக்யா தாகூர் பேசியதற்கு பலரது கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.