கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான மருத்துவ காப்பீடு பாலிசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், “கொரோனாவால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு ஆகக்கூடிய செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் வடிவமைத்து விரைந்து நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு ஆகும் செலவை ஏற்கும் வகையிலான பாலிசிகளில் கொரோனாவையும் சேர்க்க வேண்டும்” என மருத்துவக் காப்பீ்ட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பொதுக் காப்பீட்டு நிறுவனப் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் பிரம்மஜாய்சுலா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் 24 மணி நேரமாவது அனுமதிக்கப்பட்டிருந்தால்தான் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்க இயலும் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் புறநோயாளிகளுக்கான செலவை ஏற்பதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்போ அல்லது இந்திய அரசோ அறிவித்தால், அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் சுப்ரமணியம் பிரம்மஜாய்சுலா கூறியிருக்கிறார்.