ஹைதராபாத் முகநூல்
இந்தியா

ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்து - 50 ஊழியர்களை காப்பாற்றி ‘நிஜ ஹீரோ’வாக மாறிய சிறுவன்!

ஹைதராபாத் அருகே மருந்து தயாரிப்ப நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 ஊழியர்களை தனி ஒருவனாக மீட்ட சிறுவன், தெலங்கானாவின் நிஜ ஹீரோவாக மாறியுள்ளான்.

PT WEB

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள நந்திகாமா பகுதியில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த 3 மாடி கட்டுமான நிறுவனத்தில், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.

இங்கு நேற்று மாலை 5.30 மணி அளவில் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், மற்ற தளங்களில் உள்ளவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். சுற்றிலும் கரும்புகை சூழ்ந்த நிலையில், தீயும் மளமளவென பரவியதால், ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற சாய் சரண் என்ற சிறுவன், விரைவாக சென்று பெரிய கயிற்றை எடுத்து வந்தான். துளியும் தாமதிக்காமல் கட்டத்தில் விறுவிறுவென ஏறிய அந்த சிறுவன், மாடியின் ஜன்னலில் கயிற்றை இறுகக் கட்டினான். அந்த கயிற்றின் வழியாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறங்கி வந்தனர்.

இதனையடுத்து வந்த தீயணைப்புத் துறையினர் மாடிகளில் சிக்கியிருந்த மேலும் சிலரை மீட்டனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரைக் காப்பாற்றிய சிறுவன் சாய் சரணை, காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வெகுவாக பாராட்டினர். சிறுவனுக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.