இந்தியா

சிறுவனின் முட்டை வண்டியை சாய்த்த அதிகாரிகள் ! 100 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் அராஜகம்

சிறுவனின் முட்டை வண்டியை சாய்த்த அதிகாரிகள் ! 100 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் அராஜகம்

jagadeesh

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்த சிறுவனின் முட்டை வண்டியை அதிகாரிகள் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் முட்டைகள் விற்றுக்கொண்டிருந்துள்ளான் 14 வயது சிறுவன் ஒருவன். விற்பனை நேரத்தின்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ரூ.100 லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் போதிய அளவு வியாபாரம் ஆகாததால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

ஆனாலும் சிறுவனை விடாமல் அதிகாரிகள் தொந்தரவு செய்து பணம் கேட்டுள்ளனர். மேலும், ரூ.100 ரூபாய் கொடுக்கவில்லையெனில் நாளை இதே இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு பதிலளித்த அந்தச் சிறுவன் வருமானம் குறைவாக இருப்பதால் இப்போது தன்னால் ரூ.100 தர முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் தள்ளுவண்டியை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.

இதில் தள்ளுவண்டியில் இருந்த முட்டைகள் அனைத்தும் நொறுங்கி உள்ளது. இந்த சம்பவங்களை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட இப்போது மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் வைராக சமூக வலைத்தளங்களில் பரவ, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.