இந்தியா

‘தனிப்பெரும் துணையே..’ ஜடேஜாவின் குதிரைப் பாசம்!

‘தனிப்பெரும் துணையே..’ ஜடேஜாவின் குதிரைப் பாசம்!

JustinDurai

‘லாக்டவுன்’ போது, தான் வளர்த்துவரும் குதிரைகளுடனும் நேரம் செலவிட்ட மகிழ்ச்சிகரமான தருணங்களை பகிர்ந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். லாக்டவுன்’ காலத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் தான் வளர்த்துவரும் குதிரைகளுடனும் அதிகமான நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சியான தருணங்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜடேஜா.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் சில குதிரைகளை வளர்த்து வருகிறார் ஜடேஜா. குதிரைகள் மீதான தனது அன்பைப் பற்றி ஜடேஜா விவரிக்கையில்,

''கிரிக்கெட் பயிற்சி காரணமாக, எனது பண்ணை வீட்டில் போதுமான நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குதிரைகளை சவாரி செய்வதற்காக நான் எனது நண்பரின் இடத்திற்குச் செல்வது வழக்கம்.

குதிரைகள் வளர்ப்பு சிறு வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. 2010-ம் ஆண்டு எனது பண்ணை வீட்டிற்காக சில குதிரைகளை வாங்கினேன். அவற்றை கவனிக்கும்போது எனக்கு உள்மனதில் திருப்தி ஏற்படுகிறது.

நான் என் சொந்த ஆர்வத்திற்காகவே குதிரைகளை வளர்க்கிறேன். இனவிருத்திக்காக வளர்க்கிறேன். அவற்றை விற்க விரும்பவில்லை. இந்த ஆண்டு குதிரைகளுடன் போதுமான நேரம் கிடைத்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. நான் என்னை மிகவும் ரசித்தேன்’’ என்கிறார் அவர்.

குதிரைகளுகளுக்கான உணவுப்பட்டியல் மற்றும் உணவுத் திட்டங்களை  உருவாக்கி, அவற்றை எவ்வாறு ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வளர்க்க முடியும் என்பதில் கவனமாக இருப்பதாக கூறும் ஜடேஜா, குதிரைகளுக்கு புல், சனா, வெல்லம் சோளம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருவதாக கூறுகிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் குதிரை சவாரி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் குதிரை சவாரி எனக்கு எல்லா நேரத்திலும் பிடிக்கும் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.