இந்தியா

சென்னையில் மின்னூர்தி ஆராய்ச்சி மையம் - நாளை அறிவிக்கிறார் போரிஸ் ஜான்சன்

சென்னையில் மின்னூர்தி ஆராய்ச்சி மையம் - நாளை அறிவிக்கிறார் போரிஸ் ஜான்சன்

Sinekadhara

சென்னை மணலியில் அசோக் லேலேண்ட் நிறுவனம் சமீபத்தில் விலைக்கு வாங்கிய ஸ்விட்ச் மொபிலிட்டியின் ஆசிய பசிபிக் தலைமையகம் சென்னையில் அமைய உள்ளது குறித்து ஜான்சன் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 

இந்தியா-பிரிட்டன் முதலீடு மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்துள்ளார். சென்னை மணலியில் அசோக் லேலேண்ட் நிறுவனம் சமீபத்தில் விலைக்கு வாங்கிய ஸ்விட்ச் மொபிலிட்டியின் ஆசிய பசிபிக் தலைமையகம் சென்னையில் அமைய உள்ளது குறித்து ஜான்சன் அறிவிப்பு வெளியிடவுள்ளார். பிரிட்டன் நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டியை சமீபத்தில் அசோக் லேலேண்ட் வாங்கிய நிலையில், இதனுடைய மின்னூர்தி ஆராய்ச்சி மையம் சென்னையில் அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா பயணத்தின் முதல்கட்டமாக திங்கள்கிழமை குஜராத் சென்ற போரிஸ் ஜான்சன், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோரை சந்தித்தார். பிரிட்டிஷ் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜே.சி.பி. தொழில்சாலையை பார்வையிட்டு, கட்டட வேளைகளில் பயன்படுத்தப்படும் ஜே.சி.பி வாகனத்தில் ஏறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பார்த்தார். பிரிட்டனில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தின் கூட்டணியுடன் குஜராத்தில் தொடங்கப்பட உள்ள உயிரி பல்கலைக்கழக விழாவிலும் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்டார். முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் சென்று ராட்டையில் நூல் நுற்றும், ஆசிரமத்தை சுற்றிபார்த்தும் மகிழ்ந்தார் பிரிட்டிஷ் பிரதமர்.

டில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் போரிஸ் ஜான்சன். குடியரசுத்தலைவர் இல்ல வரவேற்பில் போரிஸ் ஜான்சன் பங்கேற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கவுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், அதில் சென்னை மின்னூர்தி ஆராய்ச்சி மையம் இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டன் விரைவில் இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களை உறுதிசெய்யும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.