பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதில் 80 சதவிகித இலக்குகளை வெற்றிகரமாக தகர்த்ததற்கான ஆதார படங்களை மத்திய அரசிடம் விமானப் படை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.
ஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் 80% முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்திய விமானங்கள் போட்ட குண்டுகள் மரங்கள் மீதும் தரையிலும் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியா நடத்திய தாக்குதலில் இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என சில சர்வதேச ஊடகங்களும் கூறியிருந்தன. மேலும், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலக்குகள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகளும் அரசை வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், 80 சதவிகித இலக்குகளை வெற்றிகரமாக தகர்த்ததற்கான ஆதார படங்களை மத்திய அரசிடம் விமானப் படை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 பக்கங்கள் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், ரேடார் படங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.