மும்பை  முகநூல்
இந்தியா

“டிவி கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது” - உயர்நீதிமன்றம்!

“டிவி பார்க்ககூடாது, அக்கம் பக்கத்தினரை சந்திக்கக்கூடாது, கோவிக்கு தனியாக செல்ல வேண்டும், கம்பளத்தில் உறங்கக்கூடாது என கூறுவது குற்றமாகாது” என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

“டிவி பார்க்ககூடாது, அக்கம் பக்கத்தினரை சந்திக்கக்கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, கம்பளத்தில் உறங்கக்கூடாது என கூறுவது குற்றமாகாது” என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. என்ன வழக்கு இது? என்ன காரணத்துக்காக இப்படி சொல்லப்பட்டது? இது ஏன் பேசுபொருளானது? விரிவாக அறியலாம்...

டிசம்பர் 24, 2002 ஆம் ஆண்டு, மும்பையிலுள்ள ஒரு இடத்தில் திருமணமான தம்பதியொன்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கியுள்ளது. ஆனால் அந்த மகிழ்ச்சி 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. சரியாக மே 2003-ல் திடீரென அப்பெண் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தங்களது மகள் மாமியாரின் வீட்டில் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகதான் அவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் கூறி பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்து 2003-லேயே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரில், “எங்கள் மகளை நள்ளிரவு 1.30 மணி அளவில் தண்ணீர் எடுத்து வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்கள் அவர்கள். மேலும் எங்கள் மகள் செய்த சாப்பாட்டை கேலி செய்தனர். அத்துடன் எங்கள் மகளை அக்கம் பக்கத்தினருடன் பேசக்கூடாது, கோவில் தொடங்கி குப்பை கொட்டுவது முதல் எதற்கும் தனியாகத்தான் செல்ல வேண்டும், கம்பளத்தில் உறங்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளான எங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல

இவ்வழக்கை ஏப்ரல் 2004 விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஐபிசி 498A மற்றும் 306 பிரிவுகளின் கீழ் பெண்ணின் மாமியார் மற்றும் கணவரை குற்றவாளிகள் தீர்ப்பளித்தது உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடுக்கு மீதான தீர்ப்பை, கடந்த அக்டோபர் 17-ம் தேதி நீதிபதி அபய் எஸ் வாக்வாஸ் வாசித்தார்.

அதில், “பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் கூறப்பட்டவற்றை IPC பிரிவு 498 A கீழ் கொடூரமான குற்றமாக கருத முடியாது” என்று தெரிவித்து பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை வழங்கியுள்ளார்.

மேலும், இது தொடர்பான தீர்ப்பில், “இறந்த பெண்ணின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து - ‘தங்கள் மகள் தயாரித்த உணவைக் கேலி செய்வது, டிவி பார்க்க அனுமதிக்கவில்லை, அக்கம் பக்கத்தினரை சந்திக்க விடாமல் செய்வது, கோவிலுக்கு தனியாக செல்ல வேண்டும், கம்பளத்தின் மேல் படுத்து தூங்கக்கூடாது, குப்பை கொட்ட தனியாக செல்ல வேண்டும். மேலும், நள்ளிரவு 1.30 மணிக்கு தண்ணீர் எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார்’ ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதன் காரணமாக, அப்பெண் உடல் மற்றும் மனரீதியாக துன்புறத்தப்பட்டுள்ளார் என்று பெண்ணின் தாய், அத்தை, மாமா தெரிவித்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்டதில், இறந்த பெண்ணின் புகுந்த வீடு இருக்கும் இடம் என்பது ஒரு கிராமம். அங்கு தண்ணீர் சப்ளை நள்ளிரவில்தான் வருவதாகவும், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் நள்ளிரவு 1.30 மணி அளவில்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அது தவறாகாது.

IPC பிரிவு 498A-ன் கீழ் வெறும் கம்பளத்தில் தூங்க வைப்பதை கொடுமையாக கருத முடியாது. அதேபோல், என்ன வகையான மோசமான நிலைக்கு அந்த பெண் ஆளாக்கப்பட்டார் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல், அண்டை வீட்டாருடன் அவரை பேசக்கூடாது என்று கூறுவதை குற்றமாக கருத முடியாது.

முக்கியமாக, இறந்த பெண், மார்ச் 2003 இல் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு மே 1, 2003-ல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண் இறந்ததற்கும், தாயின் வீட்டிற்கு சென்று வந்ததற்கும் இரண்டு மாதங்கள் இடைவெளி உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தன் மரணம் தொடர்பான எந்த கடிதத்தையும் அவர் விட்டுவைத்து செல்லவில்லை. ஆக, பெண் எதற்காக இறந்தார் என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லாதபட்சத்தில், இந்த இரண்டு மாத காலத்தில் பெண்ணுக்கு வேறு எதாவது பிரச்னை கூட வந்திருக்கலாம்.. ஆக, இவரது இறப்பு மர்மமாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், போதிய சாட்சியங்கள் இல்லாததாலும், கூறப்பட்டவை கொடுமையின் கீழ் வராது என்பதை காரணம் என்பதாலும் பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரின் தண்டனை தீர்ப்பை ரத்து செய்து விடுதலை அளித்துள்ளது உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.