மகாராஷ்டிராவில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி 63 வயதான தனது தாய் யல்லமா ரமா குச்கொரவியை, அவரது மகன் சுனில் குச்கொரவி கொலை செய்தார். அத்துடன், இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
மது குடிக்க, அவரது தாயார் பணம் கொடுக்காததால், சுனில் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பேரில், குச்சொரவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றத்திற்காக 2021ஆம் ஆண்டு குச்கொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்கொரவி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று (அக்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு அரிதான வகையின்கீழ் வருகிறது. குற்றவாளி தனது தாயைக் கொன்றது மட்டுமல்லாமல், அவரது உடல் உறுப்புகளை அகற்றி, அவற்றை சட்டியில் சமைத்திருக்கிறார். நாங்கள் இதைவிட ஒரு கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கைச் சந்தித்ததில்லை. குச்கொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.