டெல்லி போலிசார் கூகுள்
இந்தியா

டெல்லி | திகார் சிறை, மருத்துவமனைகள், விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த மாதம் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு ஒரே சமயத்தில் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தீவிர சோதனைகளுக்கு பிறகு அது வெறும் புரளி என்று தெரியவந்தது.

Jayashree A

கடந்த மாதம் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு ஒரே சமயத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தீவிர சோதனைகளுக்கு பிறகு அது வெறும் புரளி என்று தெரியவந்தது.

அதற்கு அடுத்த சில வாரங்களில், சென்னையைப்போல டெல்லி பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டெல்லி போலிசாரின் தீவிர சோதனைகளின் முடிவில் அதுவும் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இந்நிலையில், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்ற புலனாய்வு சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட டொமின் ஐடியானது ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதாக தெரியவந்தது.

இருப்பினும் இது சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும், இந்த மெயில் ஐடியில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ‘சவாரிம்’ என்ற அரபு வார்த்தையை ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தும் வார்த்தை என்று புலனாய்வு துறையினர் கூறியதுடன் அதுப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், ஒரே முகவரியிலிருந்து அடுத்தடுத்து, டெல்லியின் திகார் சிறைக்கும், மற்றும் 5 மருத்துவமனைகளுக்கும், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் ,ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையத்திற்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் இமெயில்களில் வந்தன. அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அகமதாபாத் விமான நிலையம்

இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த இடங்களில் போலிசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை. ஆகவே... இதுவும் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும், வெடிகுண்டு புரளி விடுத்த இமெயிலை சோதனையிட்ட புலனாய்வு துறையினர், இம்முறை மிரட்டல் விடுத்த நபர் beeble.com என்ற தளத்தை உபயோகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக இமெயிலில், “கட்டிடங்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன, அவற்றை அகற்றாவிட்டால் அடுத்த சிலமணிநேரங்களில் அவை வெடிக்கும்” என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

முன்பு மிரட்டல் விடுத்த அதே நபர்கள்தான் தற்பொழுதும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள ஒரு இராணுவப்படைக்கு ஈமெயில் கணக்குகள் பயன்படுத்துபவரை புலனாய்வு அமைப்புகள் கண்காணித்துள்ளன. சீன உளவுத்துறையின் ஆதரவுடன் இவர்கள் செயல்படலாம் என்றும், உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தற்பொழுது வரை இமெயில் அனுப்பியவரக் கண்டறிய உதவி கோரி இண்டர்போல் மூலம் ரஷ்யாவுக்கு போலிசார் கடிதம் எழுதியுள்ளனர்.