இந்தியா

'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இயக்க 90 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு தடை!

'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இயக்க 90 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு தடை!

ஜா. ஜாக்சன் சிங்

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் பணிபுரியும் 90 விமானிகளுக்கு, 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இயக்குவதில் இருந்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தடை விதித்துள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவில் கடந்த 2019 மார்ச் 13-ம் தேதி 'போயிங் 737 மேக்ஸ்' விமானம் விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இந்தியாவில் இயக்க டிஜிசிஏ தடை விதித்தது.

பின்னர், அந்த விமானங்களில் போயிங் நிறுவனம் தக்க பாதுகாப்பு அம்சங்களை சேர்த்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாக அந்த விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டிஜிசிஏ நீக்கியது. இதன் தொடர்ச்சியாக, அந்த விமானங்கள் இந்தியாவில் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் மட்டுமே' போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் உள்ளன.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 650 விமானிகளிடம் டிஜிசிஏ சார்பில் அண்மையில் திறனாய்வு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 90 விமானிகளுக்கு 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இயக்க போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட 90 விமானிகளுக்கு, அந்த விமானங்களை இயக்குவதில் இருந்து டிஜிசிஏ தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் போதுமான பயிற்சிகளை நிறைவு செய்யும் வரை 90 விமானிகளுக்கு அந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அவர்கள் மற்ற போயிங் 737 விமானங்களை இயக்கலாம். தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 11 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களே உள்ளன. இதனை இயக்குவதற்கு 144 விமானிகள் இருந்தாலே போதுமானது. ஆனால் எங்களிடம் 560 விமானிகள் (தடை செய்யப்பட்டவர்களை தவிர) இருக்கிறார்கள். எனவே, 'போயிங் 737 மேக்ஸ்' விமான சேவயைில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.