இந்தியா

சாலையில் மயங்கி உயிரிழந்த நபர் -உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்

சாலையில் மயங்கி உயிரிழந்த நபர் -உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்

webteam

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்வர். 45 வயதான இவர், அரசு அலுவலகத்திற்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியிலேயே மயங்கிவிழுந்து அவர் உயிரிழந்துள்ளார். சாலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த அவரது உடலை மாநகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், உயிரிழந்த அன்வரின் சடலத்திற்கு அருகே போலீசாரும் சிலர் நிற்கின்றனர். உடனடியாக அவரின் உடலை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு நின்றுகொண்டிருந்த குப்பை வண்டியில் தூக்கிப்போட்டு எடுத்துச்சென்றனர். இறந்தவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் நெருங்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 மாநகராட்சி ஊழியர்களும், 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மனிதநேயமற்ற செயல் என்றும், உணர்ச்சியற்ற செயல் என்றும் பல்ராம்பூர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், உடல்களை கையாள்வதற்கென்று தனி வழிமுறைகளை வைத்திருக்கிறோம். உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எடுத்துச்செல்லவே தனி குழு தகுந்த பாதுகாப்பு உடைகளுடன் இருக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகுந்த பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.