இந்தியா

கங்கை நதியில் சடலங்கள் மிதப்பது மிகத் தீவிரமான பிரச்சனை: உச்ச நீதிமன்றம்

கங்கை நதியில் சடலங்கள் மிதப்பது மிகத் தீவிரமான பிரச்சனை: உச்ச நீதிமன்றம்

EllusamyKarthik

கங்கை நதியில் சடலங்கள் மிதக்கக் கூடிய சம்பவம் மிகவும் தீவிரமான பிரச்சனை என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோர தாண்டவம் ஆடியபோது, சடலங்களை எரிக்க போதுமான கட்டைகள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். இதில், உச்சபட்ச கொடுமை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாய்ந்தோடும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வீசப்பட்டதுதான்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, "இந்த விவகாரம் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய தீவிரமான பிரச்சனை" என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்குமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.

- நிரஞ்சன் குமார்