இந்தியா

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்பு! தற்கொலையா, கொலையா?

நிவேதா ஜெகராஜா

புனேவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 18-ம் தேதி புனேவிலுள்ள பரகான் என்ற கிராமத்துக்கு அருகேயுள்ள பீமா ஆற்றில், சடலமொன்று மிதப்பதாக புனே காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர சோதனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாள்களாக தொடர்ந்து வந்த அந்த சோதனையில், மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி புனே காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, “இவையாவும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கலின் சடலமென தெரிகிறது. அனைவரும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகின்றது. இருப்பினும் எதையும் முடிவாக சொல்லமுடியவில்லை. முழு விவரங்களை பெற்றுவருகிறோம்” என்றுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள நான்கு சடலங்களில் 4 பெரியவர்களுடையது என்றும் மற்றவை குழந்தைகளின் உடல் என்றும் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவரின் உடலில் மொபைல் ஃபோன் இருந்ததால், அதைவைத்து அனைவரையும் அடையாளம் காண முடிந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அனைத்து உடல்களும் புனேவிலுள்ள பரகான் என்ற கிராமத்துக்கு அருகேயுள்ள பீமா ஆற்றிலிருந்து 100 முதல் 200 மீட்டருக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

உடல்களின் வயதை வைத்து பார்க்கையில், அந்த நால்வரில் இருவர் மோகன் பவார் (45) – சங்கிதா பவார் (40) ஆகியோர் தம்பதி என்பதும், மற்ற இருவரில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல் ராணி ஃபால்வேர் (24), மற்றொருவரான ஆண் ஷ்யாம் (28) என்றும் தெரியவந்துள்ளது. இந்த ராணி - ஷ்யாம் இருவரும், மோகன் – சங்கிதாவின் மகள் - மருமகன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 3 குழந்தைகளும் ராணி - ஷ்யாமின் குழந்தைகளென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.

இவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பதே உறுதிசெய்யப்படாத நிலையில், தற்கொலை செய்திருந்தாலும் அதற்கான காரணமோ முகாந்திரமோ தற்போதுவரை தெரியவில்லை.