மணிப்பூர் என்றதுமே, இப்போது எல்லோர் நினைவுகளிலும் வருவது கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை மட்டுமே. ஆனால், அதற்கு இன்றுவரை முடிவில்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
சமீபத்தில்கூட (இந்த வாரம் தொடக்கத்தில்) ஆயுதமேந்திய குக்கி போராளிகள் என்று சொல்லக்கூடிய சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 குக்கி போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு மறுநாள், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின. அதாவது, குக்கி போராளிகள் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
காணாமல்போன அந்த 6 பேரில், 5 பேர் மணிப்பூரின் அரசாங்கத்தில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் லைஷாராம் ஹெரோஜித் உறவினர்கள் ஆவர். அவருடைய இரண்டு கைக்குழந்தைகள், மனைவி, மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி உட்பட 5 பேர் அதில் அடக்கம். தன் குடும்பம் காணாமல் போனது குறித்து கண்ணீருடன் பேசிய அவர், “அவர்கள் அப்பாவிகள். அவர்களை எந்தத் தீங்கும் இழைக்காமல் மீண்டும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிக்க: IND Vs SA | ஒரே ஆண்டு.. ஒரே போட்டி.. இந்திய அணி படைத்த மகத்தான 10 சாதனைகள்!
இந்த நிலையில், அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, இன்று காணாமல் போனவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தின் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனது குடும்பத்தினரை ஆயுதமேந்திய போராளிகள் கடத்திச் சென்றதை, தன் மனைவியின் நண்பர் பார்த்ததாக லைஷாராம் ஹெரோஜித் தெரிவித்திருந்தார். “அப்போது அவரை போனில் தொடர்புகொண்டபோது அவர் அழுதுகொண்டிருந்தார். தம்மைச் சுற்றி ஆயுதம் ஏந்தியவர்கள் நிறைய பேர் சூழ்ந்திருப்பதாகச் சொன்னார். அதன்பிறகு போன் அழைப்பு துண்டிக்கப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட 11 குக்கி போராளிகளின் உடல்களை மருத்துவமனையிலிருந்து கொண்டுசெல்ல விடாமல், அதே இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். “என்கவுண்டரில் கொல்லப்பட்ட அந்த 11 பேரும் போராளிகள் அல்ல; குறிப்பிட்ட கிராமத்தின் தொண்டர்கள்” எனக் கூறினர். இதனால், அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தி அவர்களை கலைத்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அசாம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.