இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு இன்று நிகழ இருக்கிறது.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ‘‘ப்ளூ மூன்’’ நிகழ்வு இன்று ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடியும் இதனை பார்க்க முடியும். ‘ப்ளூ மூன்’ என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா விளக்கி உள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே ‘ப்ளூ மூன்’ ஆகும். மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும்.
எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது. இந்த ‘ப்ளூ மூன்’ வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும்.
இதை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹண்ட் என்பவர்.‘ப்ளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காட்டும் என அவர் கூறியுள்ளார். இந்த புளூ மூனை தவறவிட்டால் அடுத்து வரும் 2023 ஆகஸ்ட் 31-ம் தேதியும், 2026 மே 31-ம் தேதியும், 2028 டிசம்பர் 31-ம் தேதியும் இது மீண்டும் தோன்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.