இந்தியா

"சீனாவுக்கு எதிரான டிஜிட்டல் ஸ்டிரைக்" - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் !

"சீனாவுக்கு எதிரான டிஜிட்டல் ஸ்டிரைக்" - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் !

jagadeesh

சீன செயலிகளுக்குத் தடை விதித்தது டிஜிட்டல் ஸ்டிரைக் என்று மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாகின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய- சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு அறிவிக்கவில்லை. மோதலை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், இருநாடுகளுக்கு இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் பதற்றம் தணிந்தது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடக்கம். இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயலிகள் தொடர்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத் " நாட்டு மக்களின் தகவல்களைக் காப்பாற்றவே நாங்கள் சீன செயலிகளுக்குத் தடை விதித்தோம். இது ஒரு டிஜிட்டல் ஸ்டரைக். இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.