தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில இணைய தளங்களை தடை செய்யுமாறு இணைய சேவை நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் ராக்கர்ஸை தடை செய்ய வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும், தமிழ் ராக்கர்ஸில் படங்கள் வெளியாவது நின்றபாடில்லை.
இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ், ஈஇசட் டிவி, காட் மூவிஸ் மற்றும் லைம் டோரண்ட்ஸ் போன்ற இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் நீதிபதி சஞ்சீவ் நருலா இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISPs) அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், மத்திய அரசின் தொழில் நுட்பத் துறை மற்றும் தகவல் துறைக்கு சர்ச்சைக்குரிய இணைய தளங்களின் டொமைனை தடை செய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது.