கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியில் வருபவர்கள் மீது போலீசார் தடியடியும் சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஏழை தொழிலாளர்கள் நடந்தே வீடு சென்று சேருவோம் எனச் சொந்த ஊருக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலர் பல்வேறு காரணங்களால் தங்கள் உயிரையும் இழந்து வருகின்றனர். இது கொரோனாவை காட்டிலும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் பேருந்துக்காகக் காத்திருந்தனர். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க சமூக விலகலே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் அரசாங்கமும் ஊரடங்கைப் பிறப்பித்தது. ஆனால் பிழைக்க வந்த இடத்தில் 21 நாள்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் டெல்லியில் குவிந்தனர். இதனால் பெரும் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநில அரசுகள் பேருந்தை ஏற்பாடு செய்து மக்களைக் கூட்டிச்செல்ல வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்க மாநில அரசுகள் பேருந்துகளை டெல்லிக்கு அனுப்பி தத்தமது மாநிலத்தவர்களை அழைத்து வருகிறது. அப்படிதான் பேரெலி மாவட்டத்துக்குக் கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்த உ.பி. அரசாங்கம், அவர்களை மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் சாலையிலேயே அமர வைத்து அவர்களைக் கண்களை மூடச் சொல்லி கிருமி நாசிகளை அள்ளி தெளித்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து அம்மாவட்டத்தின் ஆட்சியரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மனிதாபிமானமற்ற செயல் என்று பலரும் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் "மாநிலத்துக்கு வந்த தொழிலாளர்கள் மீது தண்ணீரில் கலந்து குளோரின் பீய்ச்சப்பட்டது. அதில் வேதியியல் பொருள்கள் ஏதும் கலக்கவில்லை. அதனால்தான் அவர்களை நாங்கள் கண்களை மூடச் சொன்னோம். நாங்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடக்கவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் சுத்தமும் சுகாதாரமும் முக்கியம். இத்தனை பேர் ஊருக்குள் வரும்போது நோய்த் தொற்று பரவாமல் பாதுகாப்பதே எங்களது பொறுப்பு. அதனால்தான் இப்படிச் செய்தோம்" என்றார்.
மேலும் இது குறித்துத் தெரிவித்துள்ள பேரெலி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் "முதல்வரின் மேற்பார்வையின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும், தீயணைப்புத் துறையும் பேருந்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்கள், ஆனால் இவர்கள் மக்களை இப்படி சுத்தம் செய்துள்ளார்கள். இப்படியொரு காரியத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.