இந்தியா

நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை!

நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை!

webteam

மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ’ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து சாட்சியங்களும், விசாரணைகளும் நிறைவடைந்ததாகக் கூறப் பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார். தீர்ப்பு இன்று வெளியாவதாகக் கூறப்பட்டது.

 இதையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், தபு உள்ளிட்டோர் கோர்ட்டில் இன்று ஆஜராகி இருந்தனர். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்தார். வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.