அமித்ஷா, ராகுல்காந்தி, பிரதமர் மோடி pt web
இந்தியா

இந்து மக்களின் உணர்வை புண்படுத்தினாரா ராகுல்? அனல் பறந்த விவாதம்... நாடாளுமன்றத்தை அதிரவைத்த ராகுல்

PT WEB

ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான கேள்விகளால் கடும் அமளி

நாடாளுமன்ற மக்களவையில், குடியரசுத் தலைவரின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேச எழுந்த எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்ததால் கடும் அமளி ஏற்பட்டது.

அகிம்சை மற்றும் அச்சமற்ற வாழ்வைத்தான் அனைத்து மதங்களும் போதிப்பதாக தனது பேச்சை தொடங்கினார் ராகுல் காந்தி. அதே நேரம் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய் புரட்டுகளையே பரப்பி வருகின்றனர் என்றும், அப்படிப்பட்டவர்கள் இந்துக்களாகவே இருக்க முடியாது என்றும் சாடினார்.

ராகுல் காந்தி - மோடி - மக்களவை - ஓம் பிர்லா

இதனால் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எம்.பி.,க்கள் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுலின் பேச்சை இடைமறித்து பேச எழுந்த பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்களாக சித்தரிப்பது தவறானது என எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு ராகுல் காந்தி மிகுந்த ஆக்ரோஷத்துடன் பதில் அளித்தார். ஒட்டுமொத்த இந்து சமூகம் என்றால் என்னவென்றும் விளக்கம் அளித்தார்.

எதிர்ப்பு தெரிவித்த அமித்ஷா

இந்த முறை அவரது பேச்சுக்கு குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோடானுகோடி இந்து மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். நெருக்கடி காலத்தையும், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தையும் தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு அகிம்சை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றும், தீவிரவாதத்தை தூண்டியதே அந்தக் கட்சித்தான் என்றும் குற்றம்சாட்டினார்.

#BREAKING | ராகுலின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல்: மோடி கண்டனம்

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம், சீக்கியம் என அனைத்து மதங்களுமே துணிச்சலையும், அச்சமற்ற வாழ்க்கையையும்தான் போதிக்கின்றன எனக் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தன் மீது பதியப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, தனது வீட்டையும் பறித்து, அமலாக்கத்துறை மூலம் 55 மணி நேரம் வரை விசாரணையும் நடத்தினார்கள் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக இருப்பது பெருமை

ஆனால், இந்த நெருக்கடிகள் ஒன்றும் தமக்கு பெரிதல்ல என கூறிய ராகுல் காந்தி, அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க மேற்கொண்ட ஒற்றுமையான முன்னெடுப்புகள் தமக்கு பெருமிதம் தருவதாகவும் பேசினார்.

எதிர்க்கட்சியாக, எதிர்வரிசையில் அமர்ந்திருப்பது தமக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, இது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை காட்டிலும் கூடுதல் ஆற்றலை தருவதாக உணர முடிகிறது என்றும் தெரிவித்தார்.

ராகுல்காந்தி, பிரதமர் மோடி

முன்னதாக தனது உரையை தொடங்கும்போது சிவபெருமானின் படத்தை ராகுல் காண்பித்து பேசியதற்கு சபாநாயகர் ஆட்சேபம் தெரிவித்தார். அவையில் எந்தவொரு படத்தையும் காண்பிப்பது அவை மாண்புக்கு எதிரானது எனக் கூறினார்.