இந்தியா

பாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் - இராணுவ வீரர்கள் அதிருப்தி

webteam

பாஜகவின் கட்சி அமைப்புகளில் முக்கியமான ஒன்று யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அமைப்பு. கட்சியை போலவே இளைஞர் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் செகந்திராபாத்தில் நடைபெற உள்ளது. ஆனால் செகந்திராபாத்தில் எங்கு நடைபெறுகிறது என்பதில் தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 

செகந்திரபாத் கண்டோன்மெண்ட் என்பது இராணுவ வீரர்கள் வசிக்கும் இடம். இராணுவ பயிற்சி, இராணுவ அணிவகுப்புகள், முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெறக் கூடிய இடம். இங்கு உள்ள மைதானத்தில்தான் தற்போது பாஜக இளைஞர் அமைப்புக்கான தேசிய கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 23-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பாஜகவின் இளைஞர் அமைப்பினர் செல்ல உள்ளனர். 

பாஜகவின் கோரிக்கையை ஏற்று கடந்த 13-ம் தேதி அனுமதி வழங்கி இராணுவ பொது கமாண்டர் கொடுத்த உத்தரவு நகல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இராணுவ வீரர் ரோஹித் அகர்வால் என்பவர் “பாதுகாப்பு அமைப்புகளின் இடங்கள் இத்தகைய அரசியல் ரீதியான விஷயங்களுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், மூத்த அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேஜர் டி.பி.சிங் என்பவர் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தலையிட்டு இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரைப் போல் கர்னல் டி.பி.கே.பிள்ளை என்பவர் “மைதானத்தை மட்டும் ஏன் வாடகைக்கு விடுகிறார்கள், இராணுவ வாகனங்கள், தளவாடங்கள், தடுப்புகள் என அனைத்தையும் வாடகைக்கு கொடுக்கும் யோசனை யாருக்கும் வரவில்லையா ? என கேட்டுள்ளார். 

இந்நிலையில் பாஜக தொண்டர்கள் பலரும் இராணுவ மைதானத்தை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்திய நிகழ்வுகள் புதிதல்ல என்றும் கடந்த 2005-ம் ஆண்டில் சோனியா காந்தி தனது பொதுக்கூட்டத்தை நடத்த இதே மைதானத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளனர். ஆனாலும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.