நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜனநாயகப் பெருவிழாவுக்கு இடையே சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நிறைய அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சென்ற கோயிலை பாஜகவினர் கங்கை நீரால் சுத்தம்செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னூஜ் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வரும் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவர் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, கடந்த மே 6ஆம் தேதி, சித்தபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் மந்திருக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டுவிட்டுச் சென்றதும், கோயில் வளாகத்தை கங்கை நீரைக் கொண்டு பாஜகவினர் சுத்தம் செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜகவினர், "அகிலேஷ் யாதவுடன், முஸ்லிம் தலைவர்களும் கோயிலுக்கு வந்தனர். தவிர, அவர்கள் காலில் செருப்பு அணிந்திருந்தனர். அதன்காரணமாக நாங்கள் கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக நகரத் தலைவர் சிவேந்திர குமார் குவால், ”அகிலேஷ் யாதவின் வருகைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவருடன் வந்த சில முஸ்லிம்களும் மற்ற ஊழியர்களும் காலணி அணிந்து கோயிலுக்குள் நுழைந்தது மட்டுமின்றி அங்கு எச்சில் துப்பினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஐபி சிங், "அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கோயில் வளாகத்தை கங்கை நீரில் சுத்தம் செய்துள்ளது. இதற்கு முன்பாக லக்னோவில் முதல்வர் இல்லத்தை பாஜகவினர் கங்கை நீரில் கழுவினர். பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இன வகுப்பினர்களுக்கு கோயிலில் வழிபட உரிமை இல்லை என பாஜக நினைக்கிறது. ஆகவே இந்த முறை அவர்கள் அனைவரும் இணைந்து பாஜகவை வெளியேற்றுவார்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.