ஷோபா புதியதலைமுறை
இந்தியா

காரை திறந்த பாஜக மத்திய அமைச்சர்.. பிரிந்த தொண்டரின் உயிர்.. பரப்புரையின் போது நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் நடந்த பரப்புரையின் போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் கதவை திறந்த போது இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூரு அருகே கே.ஆர் புரம் தேவா சந்திர பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35). பாஜக தொண்டரான இவர், நேற்று பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றவர்களுடன் இணைந்து பயணித்தார். மத்திய அமைச்சர் முன்னால் செல்ல, பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கே.ஆர்.புரம் விநாயகர் கோயில் அருகே சென்றபோது திடீரென சாலையில் காரை நிறுத்திய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரின் கதவை திறந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த பிரகாஷ் மீது, கார் கதவு மோதியுள்ளது. இதனால் தடுமாறி சாலையில் விழுந்தார் அவர். அதே சமயத்தில் அந்த வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பிரகாஷ் மீது ஏறியது.

இந்த விபத்தில் பிரகாஷ் படுகாயமடைந்த நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரகாஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் ஷோபா கரந்தலஜே, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து இவ்விவகாரத்தில் கே.ஆர் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே கார் மற்றும் தனியார் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுனர் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, உயிரிழந்த பாஜக தொண்டர் பிரகாஷ் குடும்பத்துடன் உறுதுணையாக இருப்பதாக அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், “பிரகாஷ் ஒரு அர்ப்பணிப்புமிக்க தொண்டர். நாங்கள் அவரது குடும்பத்தோடு உறுதுணையாக இருக்கிறோம். கட்சி நிதியில் இருந்து அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

பரப்புரைக்கு சென்ற இடத்தில், அமைச்சர் கார் கதவை திறந்ததால் விபத்தில் சிக்கி பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.