டெல்லி ரஜௌரி கார்டன் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஹர்ஜீத் சிங் டெபாசிட் இழந்தார்.
டெல்லி மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. டெல்லி ரஜௌரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜர்னைல் சிங், பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில், ஆம் ஆத்மி சார்பில் ஹர்ஜீத் சிங் போட்டியிட்டார். ஆனால் பாஜக கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் சிர்ஸா 40,602 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 25,950 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 2ம் இடம் பிடித்தது. ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஹர்ஜீத் சிங் டெபாசிட்டை இழந்தார். ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, தன் வசம் இருந்த தொகுதியையே இடைத் தேர்தலில் இழந்துள்ளது அந்தக் கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனிடையே வரும் 23ம் தேதி டெல்லி மாநகராட்சித் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.