இந்தியா

‘எனது போராட்டத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது’ - அன்னா ஹசாரே

‘எனது போராட்டத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது’ - அன்னா ஹசாரே

webteam

2014 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற பாஜக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக காந்தியவாதியான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

2011 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக நடத்திய உண்ணா விரதப் போராட்டங்களின் மூலம் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்டவர் காந்தியவாதியான அன்னா ஹசாரே. அதன் பிறகு இவர் முன் வைத்த ‘லோக் பால்’ மசோதாவிற்கு நாடு முழுவதும் பெரிய ஆதரவு கிளம்பியது.

இவருடன் போராட்ட களத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வேறுபாடுகளால் விலகிச் சென்று தனியாக ஆம் ஆத்மி என்ற கட்சியை உருவாக்கி டெல்லியில் ஆட்சியை பிடித்து முதல்வராகவே பதவி ஏற்கும் அளவுக்கு அரசியலில் ஒரு சக்தியாக வளர்ந்தார். ஆனால் உண்ணா விரதப் போராட்டத்தின் முகமாக இருந்த ஹசாரே அதன் பின் முற்றிலும் போராட்ட வாழ்க்கையை விட்டு ஒதுங்கியே இருந்து வந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு, இப்போது நாட்டில் நடந்து வரும் அரசியல் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஹசாரே. ராலேகன் சித்தி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார். பாஜக உங்களது போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்விக்கு அவர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

“ஆமாம். பாஜக 2014 ஆம் ஆண்டு என்னைப் பயன்படுத்திக் கொண்டது. லோக்பால் மசோதாவிற்காக எனது போராட்டம்தான் பாஜகவையும் ஆம் ஆத்மி கட்சியையும் ஆட்சிக்கு கொண்டுவந்தது என்பது அனைவருக்குமே தெரியும். இப்போது அவர்களுக்காக நான் எல்லா அன்பையும் இழந்துவிட்டேன்” என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது. மேலும் நாட்டை எதேச்சதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது எனக் கூறிய அன்னா ஹசாரே, பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பொய்களை’ மட்டுமே பேசியது என்றும் கூறினார்.

“எவ்வளவு காலம்தான் இந்தப் பொய்கள் தொடரும்? இந்த அரசாங்கம் நாட்டு மக்களை வீழ்த்திவிட்டது. எனது கோரிக்கைகளில் 90 சதவீதம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநில அரசு கூறுவது தவறானவை” என்று கூறுகிறார் 81 வயது முதியவரான அன்னா ஹசாரே.