அரவிந்த் கெஜ்ரிவால்,  கோப்புப் படம்
இந்தியா

'அவர் ஓர் ஏமாற்றுப்பேர்வழி; சம்மன் அனுப்பியதும் ஏன் பதறுகிறார்?’ - கெஜ்ரிவாலை சரமாரியாக சாடிய பாஜக!

PT WEB

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்திய விவகாரத்தில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய சூழலில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சிபிஐ முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கௌரவ் பாட்டியா,

இதுகுறித்து டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “மதுபான கொள்கை அமல்படுத்துதல் தொடர்பான கூட்டங்களில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உள்ளார். அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் இந்த விவகாரத்தில் கேள்விக்கு உள்ளாக்க கூடாது.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலரை அரவிந்த் கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார். அதை இல்லை என்று அவரால் மறுக்க முடியுமா? நீங்கள் கொண்டுவந்த மதுபான கொள்கை சரியானதுதான் என்றால், பிறகு எதற்காக அதனை திரும்ப பெற்றீர்கள்? கொள்ளையடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரே வேலையாக கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மோசமான ஏமாற்றுப் பேர்வழி.

மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியாவிடம் இருந்து அவர் பயன்படுத்திய நான்கு அலைப்பேசிகளை கேட்டபோது ஒன்றை மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற மூன்றுகளையும் அழித்துள்ளார். அதை எதற்காக அவர் செய்தார். ஏனென்றால் அதில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் எதற்கும் அஞ்சவில்லை என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாகுங்கள். அப்பொழுது எது உண்மை, எது பொய் என்று தெரிந்துவிடும்” என காட்டமாக கூறினார்.