இந்தியா

தொடரும் முதலமைச்சர் பதவிக்கான சிக்கல்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்..!

webteam

தேவேந்திர பட்னாவிஸின் பேச்சால் சிவசேனா- பாஜக இடையே நடக்கவிருந்த கூட்டணி குறித்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று இருந்தாலும் இரு கட்சிகளிடையே நிலவி வரும் சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து தற்போதைய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “நான் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதை தவிர வேறு எந்த ஒரு திட்டமும் இல்லை. முதலமைச்சர் பதவி பகிரப்படும் என்று எந்த ஒரு ஒப்பந்தமும், இரு கட்சிகளிடையே மேற்கொள்ளப்படவில்லை” எனத் தெரிவித்தார். 

இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “இன்று எங்களுக்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் முதலமைச்சர் பட்னாவிஸின் பேச்சால் தற்போது அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை பகிர்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்று பட்னாவிஸே கூறிய பிறகு எதற்காக நாங்கள் பாஜகவினருடன் பேசவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.